/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, June 27, 2012

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ... பகுதி 2.


இதற்கு முந்தைய பதிவுகளில், நுகவோர் பாதுகாப்பு சட்டம், நீதிமன்றங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் யார் யார் மீது வழக்கு தொடர முடியும் என்பதையும் எப்படி வழக்கு தொடர முன்னோடியாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டிய்லிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங் கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget