/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, August 16, 2012


நாசாவின் 10 மிக முக்கிய சாதனைகள்


AddThis Social Bookmark Button
நாம் இன்று வாழ்ந்து வருவது தகவல் தொழிநுட்ப யுகம். இதற்கு வழி கோலியது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இணையம் (Internet) எனலாம். இது மனிதர்களுக்கிடையே தொடர்பாடலை இலகுவாக்கியது மட்டுமல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிக எளிய வழியில் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும்,பல்துறை சார் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் உதவி வருவது வெளிப்படை.
இவ்விணையத்தளம் மூலம் இன்றைய உலகில் வானியல் மற்றும் நாம் வாழும் இப் பிரபஞ்சம் குறித்த மனித இனத்தின் முதல் நிலை அறிவை பல கட்டமைப்புக்கள் மூலம் பரப்பி வருவதில் முன்னிலை வகிப்பது அமெரிக்காவிலுள்ள தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகமான (NASA) ஆகும்.
இந்நிர்வாகம் இதுவரை திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் சாதித்த மிக முக்கியமான 10 சாதனைகள் எவை என்பதை அலசும் இந்தக் கட்டுரை.

இக்கட்டுரையில் நாசாவின் சாதனைகள் வருட ஒழுங்கில் அல்லாது அதன் முக்கியத்துவம் குறித்தே வகைப் படுத்தப் படுகின்றன. எனவே நாசாவின் செயற்திட்டங்கள் நிகழ்த்தப்பட்ட கால ஒழுங்கில் அதன் சாதனைகள் காணப் படாதது குறித்த குழப்பம் வேண்டாம்.

1957 ஆம் ஆண்டு
முதலாவது செய்மதி (Satellite) ரஷ்யாவால் ஏவப்பட்ட ஸ்புட்னிக் (Sputnik) ஆகும். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கிடையே குளிர் யுத்தம் (Cold War) எனும் அரசியல் சதுரங்கமும் மறைவில் விண்வெளிப் போட்டியும் நடைபெற்றது.அதாவது விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளின் பட்டியலில் ரஷ்யா ஆரம்பத்தில் அமெரிக்காவை விட முன்னிலையில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவை சாதனைகளின் முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப் படுத்தினால், சிறிது அதிர்ச்சி ஏற்படும் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நம்பர் 1 என்று சொல்லத்தக்க பல முக்கிய சாதனைகள் ரஷ்யாவினுடையதே. அவையாவன,

1.முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (1957)
2.முதல் விண்வெளி செய்மதி (ஸ்புட்னிக் - 1)
3.விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் லைகா எனும் நாய் (ஸ்புட்னிக் -2)
4,பூமியின் ஒழுக்கிலும் விண்வெளிக்கும் சென்ற முதல் மனிதன் (வொஸ்டொக் 1 எனும் விண்கலத்தில் சென்ற யூரி ககாரின்)
5.பூமியின் ஒழுக்கிலும் விண்வெளிக்கும் சென்ற முதல் பெண் (வொஸ்டொக் 6 இல் சென்ற வலென்டினா டெரெஸ்கோவா)
6.விண்வெளியில் நடந்த முதல் மனிதர் ( வொஸ்கொட் 2 இல் சென்ற அலெக்ஸெய் லெயோனோவ்)
7. சந்திரனில் மோதிய முதல் விண்ணுபகரணம் (லூனா 2)
8.சந்திரனில் இருந்து பெறப்பட்ட முதலாவது படம் (லூனா 3)
9.சந்திரனில் இறங்கிய முதல் ஆளில்லா விண்கலம் (லூனா 9)
10.முதல் விண் வண்டி
11.முதல் விண்வெளி ஆய்வகம்
12. கிரகங்களுக்கு செல்லத்தக்க முதல் விண்கலம்

இனி நாசாவின் சாதனைகளையும் அவை குறித்த சிறு குறிப்புக்களையும் பார்ப்போம் - (10 ஆவது இடத்திலிருந்து 1 ஆவது வரை)

10.எக்ஸ்புளோரர் 1 (Explorer 1) - அமெரிக்காவின் முதலாவது செய்மதி (1958)


ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்மதியின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவின் JPL ஆய்வு கூடம் உடனடியாக வடிவமைத்த செய்மதி. இது பூமியின் வளிமண்டலத்துக்குள் புகும் காஸ்மிக் கதிர்கள் (Cosmic Rays) குறித்து ஆய்வு நடத்தியது. சுமார் 56 000 தடவை பூமியைச் சுற்றி வலம் வந்த இச் செய்மதி 1970 இல் பூமியின் வளி மண்டலத்துக்குள் புகுந்து எரிந்து சாம்பலானது.

9.ஹபிள் விண் தொலைக்காட்டி - (Hubble Space Telescope 1990)


பூமியில் இருந்து விண்ணை அவதானிக்கும் போது முகில் கூட்டங்கள் மற்றும் வளிமண்டலம் என்பன பிரபஞ்சத்தின் தோற்றத்தை தெளிவாக அவதானிக்க இடைஞ்சல் செய்து வந்தன. இதற்குத் தீர்வாக விண்ணில் ஒரு தொலைக்காட்டியை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுவி விண்ணை அவதானித்தால் என்ன எனும் கேள்வியில் எழுந்த முயற்சியின் பலனாக ஒரு ஏவுகணை மூலம் 1990 ஆ ஆண்டில் விண்ணில்  நிறுவப்பட்ட தொலைக் காட்டியே 'ஹபிள்'

8.சந்திரா எக்ஸ்-ரே தொலைக்காட்டி (Chandra X-ray Observatory 1999)


1999 ஆம் ஆண்டு நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரா தொலைக்காட்டி எக்ஸ்-ரே கதிர்களைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தைத் துல்லியமாகப் படம் பிடிக்க வல்லது. இதன் மூலம் கருந்துளை (Black Hole) ஒன்றில் விண்பொருட்கள் ஒரு செக்கனுக்குள் மறைவதைக் கூடப் படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இத் தொலைக் காட்டி பிரபஞ்ச வெளியில் அதிகபட்சமாக 10 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியைக் கூட பதிவு செய்துள்ளது இதன் திறமைக்கு சான்றாகும்.

7.வியாழனுக்கு அனுப்பப்பட்ட பயனீயர் 10 செய்மதி - (Pioneer 10 - 1972 - 1997)


சென்றடைவதற்கு மிகக் கடினம் என்று கருதப்பட்ட விண்கற்களின் பட்டை (Asteroid Belt) ஐயும் தாண்டி வியாழனுக்கு அருகே சென்று அதைப் படம் பிடித்த பயனீயர் 10 என்ற இச் செய்மதிக்கு 2 சிறப்புக்கள் உள்ளன.

1,இச்செய்மதி ஏவப்பட்ட 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமியிலிருந்து வேற்றுக் கிரகங்களுக்குப் பயணிக்கக் கூடிய எந்த ஒரு செய்மதியும் தயாரிக்கப் படவில்லை.

2.மனிதனால் ஏவப்பட்ட செய்மதிகளில் சூரிய குடும்பத்தையும் தாண்டி மிக அதிக தூரம் பயணித்து இன்னமும் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரே செய்மதி இதுதான். வியாழனைத் தாண்டிச் சென்ற இச்செய்மதி 2003 ஆம் ஆண்டு தனது இறுதி சிக்னலை அனுப்பிய போது பூமியிலிருந்து 12.2 பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் சென்று கொண்டிருந்தது.

6.அப்போலோ 13 - (Apollo 13 - 1970) - தப்பிப் பிழைத்த சந்திர விண்கலம்


நாசாவால் சந்திரனுக்கு 1970 ஏப்ரல் 11 ஆம் திகதி செலுத்தப் பட்ட இவ்விண்கலம் 55 நிமிடங்கள் கழித்து அதன் எஞ்சின்கள் பழுதடைந்து வெடித்துச் சிதறிய பின்னரும் மிகவும் ஆச்சரியத்தக்க விதத்தில் இது பசுபிக் கடலில் இறங்கி அதில் பயணித்த விஞ்ஞானிகள் உயிர் தப்பினர். இவர்களை காப்பாற்ற நாசா எடுத்துக் கொண்ட சிரத்தை ஒரு சாதனை எனக் கருதப்படுகின்றது.

5.மறுபடி பாவிக்கக் கூடிய விண்கப்பல் (The Space Shuttle - 1972)


அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனால் 1972 இல் அறிவிக்கப் பட்ட இச்செயற்திட்டம் 9 வருட கடின உழைப்புக்குப் பிறகு 1981 இல் கை கூடியது. மறுபடி பாவிக்கக் கூடிய முதலாவது விண்கப்பலாக கொலம்பியா விண்ணில் ஏவப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. இவ் விண்கப்பல் நாசாவின் செயற்திட்டங்களுக்கான செலவைக் குறைத்ததுடன் புதிய தொழிநுட்பமாகவும் எடுத்து நோக்கப் பட்டது.

4.சர்வதேச விண்வெளி நிலையம் - (ISS- International Space Station - 1998)


விண்வெளியில் தங்கி வானிலை ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாகக் கட்டம் கட்டமாக விண்ணில் நிறுவப் பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணி 1998 இல் ஆரம்பித்து 2010 இல் நிறைவுற்றது

3.செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய முதல் விண்வண்டி பாத்ஃபைன்டர் - (Pathfinder 1996-1997)


வேற்றுக் கிரகம் ஒன்றில் மோதாமல் பாதுகாப்பாகத்  தரையிறங்கி ஆய்வு செய்து படங்கள் அனுப்பிய முதலாவது விண் உபகரணம் (விண்வண்டி) பாத்ஃபைன்டர் ஆகும். 1996 ஆம் ஆண்டு பூமியிலிருந்து புறப்பட்டு 309 மில்லியன் மைல்கல் பயணித்து 1997 இல் இது செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடைந்தது. இவ் விண்வண்டியின் ஆராய்ச்சியின் பயனாக வானியலாளர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டுக்குள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

2.ஃப்ரீடம் 7 விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கர் - (Freedom 7 - The First American in Space - 1961)


விண்ணில் பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர் அலன் செபர்ட் ஆவார். மே 5 1961 இல் நாசாவால் விண்ணுக்கு செலுத்தப் பட்ட விண்கலமான ஃப்ரீடம் 7 இல் இவர் பயணித்தார். இவரது பயணம் மிகக் கடினமான  ஒன்றாக அமைந்திருந்தது. மிகச் சிறிய காரணங்களுக்காக சுமார் 24 மணித்தியாலம் தாமதித்தே இவ் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1.அப்போலோ 11 நிலவில் கால் தடம் பதித்த நாசா - (Apollo 11 - 1969)

இன்று மனித இனம் சாதித்த அறிவியல் முன்னேற்றங்களில் மிக முக்கியமான ஒன்று நிலவில் மனிதன் கால் தடம் பதித்த இந்நிகழ்வு. விண்வெளியில் முதல் அமெரிக்கராக அலன் செபர்ட் பயணம் செய்து 20 நாட்கள் கழித்து இத்திட்டம் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி அமெரிக்க மக்களுக்கு அறிவித்தார். 8 வருடங்கள் கழித்து 1969 இல் இச்சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

இதற்கு முன் 1967 இல் திட்டமிடப்பட்டிருந்த அப்போலோ 1 விண்கலம் விபத்துக்கு உள்ளாகி அதில் பயணித்த 3 வீர்ர்களும் பலியாகியிருந்தனர். எனினும் இரு வருடங்கள் கழித்து அப்போலோ 11 திட்டமிட்ட படி நிலவில் இறங்கி அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் தடம் பதித்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார். இன்றைய அறிவியல் யுகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget