/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, July 4, 2012

இன்டர்நெட்டின் ரகசியங்கள்!!



ஜாலங்கள் செய்பவைகளெல்லாம் மாயங்கள் என்று மனது பிரம்மிக்கும் அதன் சாரங்கள் அறிந்தப்பின்னேதானே ரசிக்கத்தொடங்கும். எலக்ட்ரான்கள் பற்றி அறியாதவரை மின்சாரம் என்பது ஒரு மாயமாகவே காணப்பட்டது. அதுபோல வலையமைப்பு[network] தகவல் பரிமாற்றமும் மாயமாகவே இருக்கலாம் ஆனால் அதுவும் எலக்ட்ரானின் கைவண்ணம் தான். வால்பாறை மூணாவது குறுக்குச் சந்து ரெண்டாவது மாடி பிரவுசிங் சென்டரில் இருந்து "Hi" என்று அடித்தால் அடுத்த நொடியில் wall stன் ரெண்டாவது மாடி எட்டாவது suiteல் பிலிங்காவது எப்படி என்று யோசித்ததுண்டா? இதற்குப் பின் எத்தனை விரல்கள் வேலை செய்துள்ளது என்று அறிய நீங்கள் வலைகட்டமைப்பை அறிந்து கொள்ளவேண்டும். 

முதல் மனித தகவல் பரிமாற்றம் என்பது உடல் அசைவுகளாகத் தான் இருந்திருக்க வேண்டும் ஆனால் இன்று தகவல் பரிமாற்றம் மின்காந்த அலைகளின் அசைவு வரை நடக்கிறது. நாகரீகத்தில் செம்புக காலம் எப்படித் திருப்புமுனையோ அதுபோலத் தகவல் தொழிற்நுட்பத்திலும் செம்பு தான் தொடக்கப் புள்ளி. செம்புக் கயிறு[copper cable] தொடங்கி ஒளிவடம்[optical cable] மற்றும் கம்பியற்ற பரிமாற்றம்[wireless] என இவைகள் பிரதான இணைப்பு உபகரணங்களாகப் பயன்படுகிறது . வால்பாறைக்கும் வால் ஸ்றீட்டுக்கும் இடையே இருப்பவை இவைகள் தான். ஆனால் அதனுடன் பல்வேறு உபகரணங்களும் protocol எனப்படும் இடைமுகங்களும் உள்ளன. இவை மொத்தமாக எழு நிலைகளில் பிரித்துப் பகுக்கப்படுகிறது. இணையம் என்பது வெறும் செம்புக் கயிறுகள் கொண்டு கட்டப்பட்ட சிலந்து வலை என்று சொல்லலாம். இணைய இணைப்பில் உள்ள எல்லாக் கணினிகளையும், மெயின்ஃபிரேம்களையும், சார்வர்களையும், செல்போன்களையும், ரவுட்டர்களையும், சுவிட்ச்களையும், ஹப்களையும் என எத்தனையோ உபகரணங்களைப் பிடித்துக் கொண்டுயிருக்கும் இணைப்பே இணையம்/இணைய வலை. ஆனால் இவை ஒன்றுக்கொன்று பேசவேண்டும் அதுவும் மற்றொன்றைத் தொந்தரவு தராமல் பேசவேண்டும் இதுவே இதற்கு இட்ட கட்டளை. அதற்கு முன இணையம் பற்றிச் சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம். 

ஐ.பி. முகவரி:
இது ஒருவகை நம்பர், அடையாள இலக்கம். இன்டர்நெட் ப்ரொடோகால் என்ற இடைமுகத்தின் பயன்பாட்டிற்காகப் பயன்படுபவை. ஐ.பி. முகவரியில்லாமல் இணையத்தில் உள்ள எந்த உபகரணமும் தகவலை பரிமாறிக் கொள்ளமுடியாது. அதனால் இணையத்தில் உள்ள எல்லா எந்திரங்களும் ஒர் அடையாள இலக்கம் வைத்திருக்கும். அவை  10.62.72.47 என்று நான்கு புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் அதில் 10,172,192  ஆகிய தொடக்க இலக்க எணகளைத் தவிர மற்ற எல்லா எண்களும் இணையத்தில் பயன்படுத்தலாம். இணைய இணைப்பில்லாத கணினி/ தனிவலையில் உள்ள கணினிகளில் மேற்கூறிய எண்கள் ஐ.பியாகப் பயன்படும். நிலையான மற்றும் தற்காலிக ஐ.பிகளும் உண்டு ஆனால் எந்த நேரத்திலும் ஒன்றைப் போன்ற மற்றொரு ஐ.பியினைக் காணவே முடியாது. இதை உறுதி செய்வது IANA என்ற அமைப்பு தான்.
மேக் முகவரி
இதுவும் ஒருவகை நம்பரே. FF-FF-FF-FF-FF-FF என்று ஆறு அடுக்கு பதின்அறும[hexadecimal] எண்களாகயிருக்கும். இஃது உலகில் உள்ள எல்லா இணையப் பொருட்களிலும் இருக்கும் ஒவ்வொன்றும் தனித்தனியான எண்களாக இருக்கும். ஒன்றைப் போன்ற எண் மற்ற எந்தப் பொருளிலும் இருக்காது, இதனை உறுதி செய்வது IEEE என்ற அமைப்பு. முக்கியமாக மேக் முகவரியை யாரும் மாற்றமுடியாது உற்பத்திசெய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட முகவரிதான் கயிலாங்கடை செல்லும்வரை என்று கொள்ளலாம். சைபர் போலீஸ்களின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று மேக் முகவரிதான், இதனை வைத்து உலகில் உள்ள எந்த  ஒர் இணையக் கணினியையும் அடையாளப் படுத்திவிடமுடியும்.


இந்த இருமுகவரிகளின் தேவையென்ன? இந்த முகவரிகள்தான் முன்னர்ச் சொன்ன Hi என்ற சொல்லில் எழுதப்படும் அனுப்புநர் பெறுநர் முகவரி. உங்கள் கணினியின் கமான்ட் ப்ராம்டில்[command prompt] ipconfig/all எனத் தட்டினால் இருமுகவரியும் காணலாம். tracert google.com என்று தட்டினால் கூகிளின் சர்வருக்கும் உங்கள் கணினிக்கும் இடையில் உள்ள மென் உபகரணங்களின் முகவரிகளைக் காணலாம். கவனித்தால் சில வேறுபாடுகள் அறியலாம், ஐ.பி யைத் தேவைக் கேற்ப மாற்றமுடியும் ஆனால் மேக் முடியாது. மேக் என்பது கருவியின் அடையாள எண் என்றும் ஐ.பி. என்பது இணைய இணைப்பின் அடையாள எண் என்றும் புரிந்து கொள்ளலாம். திருவிழாக் கூட்டத்தில் திருடு போன wifi மொபைல் போனைக்கூடத் தேடிக் கண்டுபிடிக்கமுடியும் அதன் மேக் அட்ரஸ் உங்களுக்குத் தெரிந்தால் அல்லது திருடரின் வீட்டு அட்ரஸ் தெரிந்தால்:)


இதில்  அனுப்புநர் பெறுநர் யார் என்று அடுத்த பகுதியில் தொடரும்....
அடிக்குறிப்பு: 
மேக் முகவரி-Media Access Control Address
ஐ.பி.முகவரி-Internet Protocol Address
IANA-Internet Assigned Numbers Authority 
IEEE-Institute of Electrical and Electronics Engineers

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget