எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு, கடந்த பத்தாண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம்
பன்மடங்கு சரிவை சந்தித்துள்ளது. இதனால், விலைவாசி பன்மடங்கு கூடியுள்ளது. 1994ல், டாலருக்கு, 14 ரூபாய் என்றிருந்த ரூபாயின் மதிப்பு, தற்போது, டாலருக்கு, 60 ரூபாய், 16 காசுகள் என்ற அளவிற்கு, மாபெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
அதுவும், கடந்த ஆறு மாதத்தில் மட்டும், 6 ரூபாய் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாகவே, டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ, "டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பில், ஒரு ரூபாய் குறைந்தால், ஆண்டிற்கு, 9,000 கோடி ரூபாய் வீழ்ச்சி எங்களுக்கு ஏற்படுகிறது. அதனால், நாங்கள் விலையை கூட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது'
என்கின்றன.
நம் சுதந்திரத்திற்கு பின், நம்மை விட மோசமான நிலையில் இருந்த நாடுகள் எல்லாம், தற்போது, மாபெரும் வளர்ச்சி பெற்று வலம் வருகின்றன. ஆனால்,
நம் நாடு?
பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை புரிந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டெடுக்கும் ஸ்திரத்தன்மை இல்லாததாலும், பல லட்சம் கோடி ரூபாய், கறுப்பு பணமாய் சுவிஸ் பேங்கில் பதுக்கி இருப்பது தெரிந்தும், அவற்றை மீட்டெடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும், இப்படி மாபெரும் வீழ்ச்சியை, அனைத்து நிலைகளிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இவற்றை மீட்டெடுக்க, ஒரு சீரிய திறமை மிக்க தலைமை வேண்டும். 1920க்கு பின், அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. தொழில்கள் நசிந்தன. எதிர்காலமே இருண்டு கிடந்தது. அப்போது, ரூஸ்வெல்ட் வழி நடத்தி, அந்நாட்டை மீட்டார்.
இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு, வின்ஸ்டன் சர்ச்சில் தலைமை தாங்கி, வெற்றிப் பெற்றுத் தந்தார்.
"அமைதியான காலங்களில், நல்ல நிர்வாகிகள் வேண்டும்; போர்க் காலங்களில், நல்ல தலைவர்கள் வேண்டும்' என்று, ஜான் பி.கோட்டார் சொல்வார்.
அதன் படி, கடினமான போர்க் காலத்தில், தற்போது இருக்கும் நம் நாட்டுக்கு, கைப்பொம்மையாக இல்லாது, எந்த விஷயத்திலும், தன்னிச்சையாக துணிந்து,
திறமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும், ஒரு நல்ல தலைவர் வேண்டும். அப்போது தான் இந்தியா உருப்படும்.
No comments:
Post a Comment