ஜிமெயில் ஒரு அற்புதமான மின்னஞ்சல் சேவை என்பது இதைப்பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பயன்படுத்தாதவர்கள் கூட இது பற்றி பல விஷயங்கள் தெரிந்து வைத்து இருப்பார்கள். எனவே இதற்கு முன்னுரை அவசியமில்லை. நேராக விசயத்திற்கு வருகிறேன். இந்தப்பதிவில் நீங்கள் ஏன் ஜிமெயில் (இதுவரை பயன்படுத்துவதில்லை என்றால்) பயன்படுத்த வேண்டும்? என்று கூறப்போகிறேன்.
இதில் கூறப்படும் சேவைகள் / வசதிகள் சில நீங்கள் தற்போது பயன்படுத்தும் மின்னஞ்சலில் (Yahoo! , Hotmail , AOL, Rediff etc) இருக்கலாம் இருப்பினும் இது போல அனைத்து வசதிகளும் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சலில் இருக்காது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இதில் உள்ள பயன்களை முதலில் கூறுகிறேன்
ஸ்பாம்
மிகப்பெரிய பிரச்சனை இது தான். நமக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் இருந்து எல்லாம் மின்னஞ்சல் வரும் லாட்டரி பரிசு சீட்டு விழுந்ததாக, உங்கள் வங்கி விவரங்களைக் கேட்டு, வயாகரா மாத்திரை வாங்கக்கூறி, ஆபாச மின்னஞ்சல்கள் என்று வந்து குவியும். இவை ஜிமெயிலில் கிடையாது அல்லது மிகக் குறைவான அளவு வருகிறது. மிகத் திறமையான தொழில்நுட்ப முறையில் இவற்றை வடிகட்டி விடும். இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. விஷயம் தெரிந்தவர்கள் ஓரளவு சமாளிக்கலாம், ஒன்றுமே தெரியாதவர்கள் ஸ்பாம் விசயத்தில் ஏமாற அதிக வாய்ப்புள்ளது.
இதைவிட முக்கியமான ஒன்று நம் அனுமதி இல்லாமலே நாம் அனுப்பவது போல வயாகரா விளம்பரங்கள் நம்முடைய contact ல் உள்ளவர்களுக்கு சென்று விடும். இதை சந்திக்காத நபர்களே இருக்க மாட்டீர்கள் என்ற நினைக்கிறேன் குறிப்பாக யாஹூ வில் இருந்து அதிகம் வரும்.
வேகம்
எப்போதுமே நாம் பயன்படுத்தும்
மென்பொருளாகட்டும் கணினியாகட்டும் வேகமாக இருந்தால் தான் நமக்கும் பயன்படுத்த விருப்பம் இருக்கும். இல்லை என்றால் ஒன்றை க்ளிக் செய்து விட்டு அது திறப்பதற்க்காக காத்துக்கொண்டு இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனை ஜிமெயிலில் கிடையாது. தேவையற்ற விசயங்களை நீக்கி, மல்டிமீடியா சமாச்சாரங்களைக் குறைத்து, எவ்வளவு விரைவாக திறக்க முடியுமோ அவ்வளோ தூரம் உதவி செய்கிறது.ஜிமெயில் AJAX என்ற தொழில்நுட்ப முறையை சிறப்பாக பயன்படுத்துகிறது. எனவே அதனுடைய வேகம் மற்ற மின்னஞ்சல்களை விட அதிவேகத்தில் உள்ளது. புது மின்னஞ்சல் வந்தாலோ, Reply செய்தாலோ, Forward செய்தாலோ தாமதம் செய்யாமல் அடுத்த நொடியே நடக்கும். இதே மற்ற மின்னஞ்சல்கள் முக்கிக் கொண்டு இருக்கும். க்ளிக் செய்துவிட்டு சில நொடிகளுக்கு பிறகே எதுவும் நடக்கும்.
எளிமை
கூகுள் என்றாலே எளிமை தான். இதை கூகுள் தளத்தின் முகப்புப் பகுதியில் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதையே தான் தன்னுடைய ஜிமெயில் சேவைக்கும் பின்பற்றுகிறது. இந்த விசயத்தில் ஜிமெயில் வடிவேல் பாணியைத் தான் பின்பற்றுகிறது அதாவது புடுங்குறது எல்லாம் தேவை இல்லாதது என்பது மாதிரி அனைத்தையும் நீக்கி தேவைப்படும் நேரங்களில் மட்டும் அந்த வசதி நமக்கு தெரியும்படி மாற்றி இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக இடது புறம் Inbox sent mail Compose mail மட்டுமே இருக்கும் மற்றவை தேவை என்றால் அங்கே நமது மவுசை கொண்டு சென்றால் போதும் அவை தெரியும் படி அமைத்து இருப்பார்கள். அது போல Delete Forward spam என்று எதுவும் முகப்பில் இருக்காது. நீங்கள் ஒரு மின்னஞ்சலை தேர்வு செய்தால் மட்டுமே அவை தெரியும் காரணம் தேர்வு செய்யாமல் நாம் Delete forward அல்லது வேறு லேபிள் செய்ய முடியாது அப்புறம் எதற்கு அவை தெரிய வேண்டும். எப்படித்தான் இதெல்லாம் யோசிக்கறாங்களோ! உண்மையாகவே மலைப்பாக இருக்கிறது.
சுருக்கமாகக் கூறினால் ஜிமெயில் F டிவியில் வரும் மாடல் போல இருக்கும் மற்ற மின்னஞ்சல்கள் கல்யாணப் பெண் போல அதீத அலங்காரத்துடன் இருக்கும்
ஃபோல்டர் / லேபிள்
நான் யாஹூ பயன்படுத்திக்கொண்டு இருந்த போது அதில் இருந்த ஃபோல்டர் வசதி ரொம்ப உபயோகமாக இருந்தது. மின்னஞ்சல்களை பிரிக்க எளிதாக இருந்தது. ஜிமெயிலில் ஃபோல்டர் வசதி இல்லை ஆனால் அதற்கு இணையாக லேபிள் வசதி உள்ளது. இதுவும் ஃபோல்டர் போலத் தான் ஆனால் வேறு மாதிரி. முதலில் ஜிமெயிலுக்கு மாற நான் தயங்கியதற்கு இதுவும் ஒரு காரணம் ஆனால் பயன்படுத்திய பிறகு தான் இது எவ்வளவு எளிமை இதனால் எப்படி எளிதாக அனைத்தையும் பிரிக்க முடியும் என்று புரிந்தது.
தேடல்
கூகுள் என்றால் தேடல் தான் பிரபலம். தனது ஜிமெயிலிலும் இதை உட்புகுத்தியுள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான மின்னஞ்சல்களை நொடியில் கண்டறிய முடியும். அட்வான்ஸ் தேடுதல் முறையில் தேடுதலை இன்னும் எளிமை ஆக்குகிறது. கூகுள்க்கு பிடிக்காத ஒரே வார்த்தை “சிரமம்”
No comments:
Post a Comment