யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.
ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.
சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.
பெரும்பாலும், இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை, அவற்றை மீண்டும் பார்மட் செய்வதன் மூலம், தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழியை மேற்கொண்டால், உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும்.
இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும். இதற்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.
யு.எஸ்.பி. ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் “Hardware and Sound,” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.
இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக, மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, “Scan For Hardware Changes.” என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை, ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல் படுத்திப் பார்க்கவும்.
இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை பார்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும்.
இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். பார்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும்.
“Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால், அதனை எடுத்துவிடவும். இந்த வகை பார்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக பார்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக பார்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை பார்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டி லிருந்து எடுத்து விடவும்.
விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள டேட்டா அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது. இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான், டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும்.
இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டருக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். டேட்டா பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.
No comments:
Post a Comment