விண்டோஸ் 7 குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு வேகமான ஒரு ஆபரேட்டிங் ஸிஸ்டம். விண்டோஸ் எக்ஸ்.பி க்குப் பின் மைக்ரோசாஃப்ட் பொறியாளர்கள் நிஜமாகவே தலையைப் பிய்த்துக் கொண்டு உழைத்து உருவாக்கியது.
வின் 7 இல் உள்ள வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல பெரிய புத்தகங்களே உள்ளன. அதில் நாம் இன்று பார்க்கப் போவது நம் கணிணி திரையை முழுமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு படப் பதிவாக எப்படி எடுப்பது என்பது. மேலே தலைப்பில் உள்ளது போல இன்றைய தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பற்றிய பதிவு இது.
ஒரு படம் ஆயிரம் தகவல்களைச் சொல்லும் என்பது சீனப் பழமொழி. நம் திரையின் ஒரு பகுதியை யாருக்காவது படமெடுத்து அனுப்பத் தேவைப் படலாம். ஒரு சிறந்த உதாரணம் - வெளிநாட்டில் வாழும் அன்பர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் இணையத்தின் மூலமாகத் தொடர்பு கொள்வது. விடியோ திரையில் காண்பதற்கோ அல்லது ஜிமெயில் சாட் செய்வதற்கோ அவர்களுக்கு எப்படி அதை நிறுவுவது என்பது பற்றி தெளிவு படுத்த படமாகக் காண்பிப்பது சுலபமாக இருக்கும்.
ஆதிகாலம் முதலே விண்டோஸில் Function+PrtSc விசை இந்த வசதியை அளித்தாலும் வின் 7 இன் ஸ்னிப்பிங் டூல் (Snipping Tool) மிக எளிதானது. முதலாவதில் ஒன்று முழுத் திரையையும் படப் பதிவாக்கலாம், அல்லது அதனுடன் ஆல்ட் (alt) விசையையும் சேர்த்து அழுத்தினால் ஆக்டிவ் ஆக இருக்கும், அதாவது அனைத்திற்கும் முன் நிற்கும் ப்ரோகிராமை படப் பதிவாக்கலாம். கீழே பாருங்கள்.
முதலாவதில் முழுத் திரையையும் ப்ரிண்ட் எடுத்தது (திரையில் தேவையற்ற சிலதை நீக்கி விட்டேன்). இரண்டாவது அனைத்திற்கும் முன் நிற்கும் ப்ரோகிராமை ப்ரிண்ட் எடுத்தது (நோட்பேட்).ஆனால் இம்முறையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் படப்பதிவு எடுத்த பின் பெயிண்ட், போட்டோஷாப் மாதிரியான ப்ரோகிராமை திறந்து அதில் தான் பேஸ்ட் செய்ய வேண்டும். இது எப்போதுமே இரண்டு செயல்பாட்டைக் கொண்டது. முதலில் ப்ரிண்ட் ஸ்க்ரீன், பிறகு பேஸ்ட் செய்வது, பின்னர் தேவையான அளவு கிராப் செய்வது. இது அவ்வளவு விரைவான வழியல்ல. மேலும், Function keyஐ ஒரு விரலால்அழுத்தி, PrtScஐ மற்றொரு விரலால்அழுத்தி, அதனுடன் ஆக்டிவ் விண்டோவை படப் பதிவெடுக்க altகீயையும் மற்றொரு விரலால் அழுத்தி ஒரு மாதிரி வர்மக் கலை இந்தியன் தாத்தா மாதிரியெல்லாம் பாடுபட வேண்டும். அது மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது போல. ஆனால் எலியின் மூலம் மலையை இழுக்கும் இணையக் காலத்தில் கஷ்டப்படாமல் இருக்கத்தான் Snipping Tool.
வின் 7 ற்கு முன் வந்த திருஷ்டிப் பரிகாரமாகிய விண்டோஸ் விஸ்டாவிலும் இது உண்டு.
சரி ஸ்னிப்பரை எப்படி நிறுவுவது?
இதுவும் சுலபம், இதோ.
1. ஸ்டார்ட் மெனுவில் "Program" என்று டைப் செய்ய ஆரம்பியுங்கள். நீங்கள் பேச ஆரம்பிக்கும் போதே என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஊகித்து 'இதுவா, அதுவா' என்று மடக்குக் கேள்வி கேட்கும் மனைவியைப் போலவே விண்டோஸும் கேட்கும்.(ஒரு வேளை மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுளார்களின் மனைவிமார்கள் இந்த auto fill or auto complete வசதி கண்டிப்பாக வேண்டுமென்று வற்புறுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆண் உலகம் நல்லவற்றை என்றும் ஏற்குமாதலால் இதையும் ஏற்றிருப்பார்கள்) கீழே காட்டியிருப்பது போல விண்டோஸ் தயாராகி விடும். அதில் "Programs and features" ஐ தேர்வு செய்யுங்கள்.
2. பின் இடப்பக்கவாட்டில் இருக்கும் “Turn Windows Features on or Off” ஐ தொடுங்கள்.
3. ஒரு சிறிய விண்டோ திறக்கும். அதில் Tablet PC Components ஐ தேர்வு செய்யுங்கள். OK வை க்ளிக் செய்யுங்கள்.
ஸ்னிப்பர் ரெடி.
ஸ்னிப்பர் ரெடி.
4. Start menu வில் மறுபடி Snip என்று டைப் செய்தால் Snipping Tool தெரியும். அதை பிடித்து இழுத்து (drag and drop) டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம். அதுதான் தேவைப் பட்ட போதெல்லாம் டக்கென்று துவக்க வசதியாய் இருக்கும்.
உங்கள் கணிணியில் ஸ்னிப்பிங் டூல் இருக்கும் இடம் -
%windir%\system32\SnippingTool.exe
இதை நிறுவியபின் அதற்கான ஐகானை டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம். அது இவ்வாறு தெரியும். இதன் பயன்பாட்டைப் பார்க்கலாம் முதலில்.
அதை க்ளிக் செய்தால் திரை முழுதும் மங்கலாகி விடும், அதாவது இனிமேல் நீங்கள் திரையின் எந்தப் பகுதியை படப்பதிவு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யலாம். கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். ஸ்னிப்பிங் டூல் ரெடி. நமது எலியாரும் + குறியீட்டுக்கு மாறி விடுவார். அதைக் கொண்டு கோடு போட்டால் ரோடு போட்டு விடும் ஸ்னிப்பர்.
திரையில் தேவையான இடத்தில் ஒரு சதுரமாக வரைந்தால் போதும், திரையின் தேர்வு செய்த பகுதி அழகாக ஒரு தனி விண்டோவில் தெரியும், இவ்வாறு.
இதை அவுட்லுக் மெயிலில் ஒட்டி அனுப்ப வேண்டுமென்றால் சுலபமாக Ctrl+C அழுத்தி, பின் மெயிலில் Ctrl+V செய்தால் போதும். இதையே Jpeg, PNG, BMP முதலியனவாக சேமிக்கவும் செய்யலாம். இதிலும் காப்பி பேஸ்ட் தானெ என்ற கேள்வி எழுபவர்களுக்கு ஒரு ஷொட்டு, சரிதான் நண்பரே, ஆனால் சுலபமான வழியா இல்லையா?
இதில் பயனுள்ளவை என்னவென்றால், படப்பதிவு செய்த பின் அதில் எதையாவது குறிப்பிட்டுக் காட்ட விரும்பினால் பேனா மற்றும் ஹைலைட்டர் கொண்டு குறியிடலாம். உதாரணம்:
ஸ்னிப்பிங் டூலை வைத்துக் கொண்டே பெரும்பாலான படங்களை உருவாக்கியிருக்கிறேன் இப்பதிவில். ஆனால் ஸ்னிப்பிங் டூலையே படப் பதிவாக எடுக்க நான் நாட வேண்டியிருந்தது வர்மக் கலையைத் தான், மன்னிக்கவும் Function+PrtSc விசையைத் தான்.
No comments:
Post a Comment