/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, March 31, 2012

விண்டோஸ் 8 - புதிய தகவல்கள்


தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது.

அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது.

புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.

அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.

"கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப் படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது.

இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.

புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம்.

பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.
இருப்பினும் சில விஷயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும்.

1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.
விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர் களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget