ஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம். எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள். அது அவுட்லுக் அல்லது தண்டர்பேர்ட் ஆக இருக்கலாம். இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் (Mail User Agent MUA) என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் (Simple Mail Transfer Protocol SMTP) என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன. இந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன.
ஒரு இமெயில் செய்தியின் To: பீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில் பாக்ஸ் ஒதுக்கப்பட்டிருக்கும்)முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது. ஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட் (Mail Delivery Agent MDA), (அது அவுட்லுக் அல்லது ஒரு சர்வராக இருக்கலாம்) இந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் (Post Office Protocol POP3) அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் (Internet Message Access Protocol IMAP 4) என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது. பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது. அதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. எடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும். என்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம். அப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இறக்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம்.
ஆனால் ஐமேப் 4 பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும். இது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது. இந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது. இன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும். அந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது. மெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்களைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது. கம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது. (இது முகவரியில் @ என்ற அடையாளத்தினை அடுத்து இடம் பெறுவது) அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான (Mail Exchange MX) தேடலாக இது இருக்கும். இதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும். பல டொமைன் நேம்களில் சில (com, net, org, edu, gov) மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக இமெயிலைப் பெறுபவரின் முகவரி x@otherdomain.com என இருப்பதாக வைத்துக் கொள்வோம். டொமைன் நேம் சர்வரிடமிருந்து பெறப்படும் எம்.எக்ஸ் ரெகார்ட் பெரிய அளவில் இயங்கும் இத்தகைய சர்வர்களின் பட்டியலாகவே இருக்கும். இந்த மெயில் பலவகை எம்.எக்ஸ் சர்வர்களின் வழியாக அதற்கென உள்ள டொமைன் கிடைக்கும் வரை செயல்படுத்தப்படும். எம்.எக்ஸ் என்பவை மெயில்களைப் பெறும் MTAக்கு இன்னொரு பெயர். இந்த மெயில் இவ்வாறான செயல்பாட்டில் செல்லும்போது இறுதியில் அதற்கான சர்வரை அடைகிறது. பின் மெயிலுக்கு உரியவர் பயன்படுத்தும் MDA மூலம் அது அவரை அடைகிறது. அல்லது வெப் மெயில் மூலம் POP3 அல்லது IMAP4 வழிமுறை பயன்படுத்தப்பட்டு மெயில் படிக்கப்படுகிறது.
ஸ்பேம் (SPAM) என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரொகிராம் பயன்படுத்து கிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.
இமெயிலின் வடிவமைப்பும் பாதுகாப்பும்
இமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME Multipurpose Internet mail Extensions என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. அதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது.
அனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்.
புஷ் மெயில்
ஹேண்ட் ஹெல்ட் எனப்படும் கைகளில் எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் போன்களில் இந்த புஷ் மெயில்கள் கிடைக்கின்றன. இந்த வகையில் இன்டர்நெட் இணைப்பு எப்போதும் இயக்கப்பட்ட நிலை யிலேயே இருக்கும். அந்த சாதனத்தில் செட் செய்த வகையில் அந்த முகவரிக் கான இமெயில் சாதனத்தை சென்றடை யும். பெரும்பாலான இத்தகைய மெயில்களில் மெயில்களின் ஹெடர்கள் மட்டுமே பெறப்படுகின்றன. பின் இவற்றை இயக்கி முழு அஞ்சலையும் படிக்கலாம். இதனால் பேண்ட் வித் மிச்சம் பிடிக்கப்படுகிறது. புஷ்மெயில் பரிமாற்றத்திற்கு IMAP 4 பயன்படுத்தப்படுகிறது. பிளாக்பெரி தன்னுடைய சொந்த வழிமுறை ஒன்றை பயன் படுத்துகிறது.
No comments:
Post a Comment