ஆகஸ்ட் 25ஆம் நாளை, லினக்ஸ் சிஸ்டத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடுவது வழக்கம். லினக்ஸ் தன் 20 ஆவது பிறந்த நாளை சென்ற ஆண்டில் கொண்டாடியது. அப்போது அதிக ஆரவாரமும் கலகலப்பும் இருந்தன.
இப்போது இணையம், க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் பிரிவுகளில்,லினக்ஸின் ஆட்சி பரவலாக உள்ளது. எனவே லினக்ஸ் ஆதரவாளர்கள் நிச்சயம் இந்த ஆண்டு இதனை அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.
1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உருவெடுத்த லினக்ஸ், பல வெற்றி மைல்கற்களைத் தாண்டி பெரிய அளவில் வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. லினக்ஸ் கடந்து வந்த அந்த வேகமான முன்னேற்ற பாதையைச் சற்று இங்கே பார்க்கலாம்.
லினஸ் டோர்வால்ட்ஸ் ஆகஸ்ட் 25, 1991ல் லினக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் 17ல், முதல் கெர்னல் வெளியானது. அக்டோபர் 5ல் பொதுமக்களுக்கு லினக்ஸ் தரப்பட்டது.
அதே ஆண்டு, நவம்பரில் மான்செஸ்டர் கம்ப்யூட்டர் மையம், தன் இணைய தளத்தில், மக்களுக்கு லினக்ஸ் கெர்னலை இலவசமாக வழங்கியது. இப்போது இருப்பதைப் போல டிஸ்ட்ரிபியூஷன் என்று எதுவும் இல்லை.
அப்போதிருந்த 5.25 அங்குல டிஸ்க்கெட்டில் இருந்து லினக்ஸை இயக்கலாம். பூட் டிஸ்க் கொண்டு முதலில் கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு, பின் கேட்கும் போது, அதனை எடுத்துவிட்டு, லினக்ஸ் டிஸ்க்கைச் செருகி, இயக்கலாம்.
1992 பிப்ரவரியில், முதல் முதலாக இன்ஸ்டால் செய்யக் கூடிய லினக்ஸ் வெளியிடப்பட்டது. டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக் கழகம் (Texas A&M University) TAMU என்ற லினக்ஸ் பயனாளர் குழுவினைக் கொண்டு வந்தது. அடுத்த பெரிய லினக்ஸ் வெற்றி, முதல் வர்த்தக ரீதியான வெளியீடு நவம்பர் 1992ல் கிடைத்தது.
அடுத்ததாக, 1994ல், Debian GNU/Linux, S.u.S.E, மற்றும் Red Hat Linux எனத் தொடர்ந்து வெளியாயின. இவை இன்றும் தொடர்ந்து இயங்குவதுடன், மாற்றங்களையும் வசதிகளையும் தந்து கொண்டிருக் கின்றன. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம் என்ன? காரணம் சொல்வதென்றால், டஜன் கணக்கில் நிறைய சொல்லலாம்.
லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதுகெலும்பாக லினக்ஸ் கெர்னல் உள்ளது. இதன் குறியீடுகள் மிகச் சிறப்பும் எளிமையும் கொண்டவை. இவற்றைச் சுற்றி பல சாப்ட்வேர் தொகுப்புகள் அமைந்து, அவற்றை கெர்னல் இயக்கும் வகையில் அமைந்துள்ளன. எந்த கம்ப்யூட்டர் கட்டமைப்பிலும், எவ்வளவு பெரிய அமைப்பிலும் இயங்குவதே இதன் சிறப்பு.
லினக்ஸ் கம்யூனிட்டி என அழைக்கப்படும் குழுவில் பல வல்லுநர்களும், இதற்கென உழைப்பவர்களும் இன்னும் இயங்கி வருகின்றனர். இவர்களைச் சுற்றி, இவர்களின் திறனை உணர்ந்து, இவர்களை உற்சாகப்படுத்தி, லினக்ஸை மேம்படுத்துபவர்களும் உள்ளனர்.
எனவே லினக்ஸ் என்பது ஒரு சாப்ட்வேர் மட்டுமல்ல; அது ஒரு தொழில் நுட்ப வல்லுநர்களின் சமுதாயத்தின் பெயர் என்றால் மிகையாகாது. இதற்கு இணையாக ஒன்றை நாம் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை என்பதே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும்.
|
No comments:
Post a Comment